Monday, March 30, 2009

முதுமை



இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆன
வர்ண ஓவியம்

நரை..
இந்த நரை
வெற்றிலை போட்ட அனுபவங்கள்
தடவி விட்டுச் சென்ற
சுண்ணாம்பு

இது..
மூச்சுக்குதிரை
ஓடிக் களைத்துத்
தள்ளிய நுரை

இந்த சுருக்கங்கள் ..
இது உயிர் எழுதிக் கொண்டிருக்கும்
ராஜினாமாக் கடிதம்
மறுப்பது போல் தலையாட்டும்
வாழ்வையா..?
மரணத்தையா..?

மு.மேத்தா

Monday, January 26, 2009

தமிழன்பனின் வரிகளிலிருந்து :



பத்தாவது முறையும்
தடுக்கி விழுந்தவனை
பூமித்தாய்
தொட்டு முத்தமிட்டாள் -
அவன்,
ஒன்பது முறை
எழுந்து நிற்க
முயன்றமைக்காக

* * *

மாங்கல்ய மகிமையை
மனைவி அறிவாள்
மணாளன் அறிவான்
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகமாய் அறிவான்

* * *
பனித்துளியில்
மூழ்கிப் போகும்
பயம் உள்ளவனுக்கு
கப்பல் செய்யக்
கற்றுக் கொடுப்பதால்
என்ன பயன்?

* * *
முள்ளைப் பாட மறந்து
ரோஜாவைப் பாடினேன்
இரவு தூங்க முடியவில்லை
ஒரே குத்தல்கள்

* * *

எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற உறுப்பினரானார்
அமைச்சரானார்
ஒருமுறை கூட
மனிதராகாமலே
மரணமானார்

* * *
கவிஞர் ஈரோடு தமிழன்பன்



Friday, March 28, 2008




மர நிழலில் ஒதுங்கினேன்

மர அசைவில்

நேற்று சேகரித்ததிலிருந்து

எனக்கு மட்டும் மழை


- ஜெஸிலா







சிகரெட் கடைதனில்
சின்னச் சின்ன பெட்டி

சின்னச் சின்ன பெட்டிக்குள்
சீராய் அடுக்கிய தீக்குச்சி

தீக்குச்சி முனையில் நஞ்சு
நஞ்சு பூசும் பிஞ்சு விரல்கள்

பிஞ்சு விரல் நகக்கண்ணில்
தகதகக்கும் துகள்கள்

தகதகக்கும் துகள்களுடன்
கந்தகக் கிடங்கு

கந்தகக் கிடங்குகளில் நம்
கண்மணிச் சிறார்கள்

- அப்துல் கையூம்



உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !

எம். ரிஷான் ஷெரீப்



வீட்டைச்சுற்றி
தோட்டம் போட்டேன்
தோட்டம் சுற்றி
வேலி போட்டேன்
வேலி சுற்றி
காவல் போட்டேன்
காவலைப்பற்றி
கவலைப்பட்டேன்.

- ஷண்முக சுப்பையா
அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.

-தாஜ்
--------------------------------
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

- தபூ சங்கர்
--------------------------------
விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்

--------------------------------
ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."

-பசுவய்யா (சு.ரா)
--------------------------------

வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசம்பலை

- மகுடேசுவரன்
- நன்றி : ஆனந்த விகடன் (2002)

--------------------------------
இமாலய முன்னேற்றம்
இந்தியா முழக்கம்

இரும்புக் கம்பியால்
குரும்பு வடிவில்
ஒரு கூண்டு

என் வீட்டு வாசலில்
ஜீரோ வால்ட் பல்புக்கு.

- அப்துல் கையூம்
--------------------------------