Monday, January 26, 2009

தமிழன்பனின் வரிகளிலிருந்து :



பத்தாவது முறையும்
தடுக்கி விழுந்தவனை
பூமித்தாய்
தொட்டு முத்தமிட்டாள் -
அவன்,
ஒன்பது முறை
எழுந்து நிற்க
முயன்றமைக்காக

* * *

மாங்கல்ய மகிமையை
மனைவி அறிவாள்
மணாளன் அறிவான்
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகமாய் அறிவான்

* * *
பனித்துளியில்
மூழ்கிப் போகும்
பயம் உள்ளவனுக்கு
கப்பல் செய்யக்
கற்றுக் கொடுப்பதால்
என்ன பயன்?

* * *
முள்ளைப் பாட மறந்து
ரோஜாவைப் பாடினேன்
இரவு தூங்க முடியவில்லை
ஒரே குத்தல்கள்

* * *

எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற உறுப்பினரானார்
அமைச்சரானார்
ஒருமுறை கூட
மனிதராகாமலே
மரணமானார்

* * *
கவிஞர் ஈரோடு தமிழன்பன்



No comments: